மாணவிகளுக்கு இந்தாண்டு முதல் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

M K Stalin Governor of Tamil Nadu
By Petchi Avudaiappan May 11, 2022 10:32 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழக அரசின் பட்ஜெட்டின் அறிவிக்கப்பட்டது போல உயர்கல்வி உறுதித்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என்ற திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடத்தில் உள்ளது. 

ஒவ்வொரு முறையும் இந்த திட்டம் தொடங்கப்படுமா என பெண்கள் எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். ஆனால் பட்ஜெட் உரையின் போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டத்தை முதலாண்டில் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மகளிருக்கான உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என தெரிவித்திருந்தார். 

அதேசமயம் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இத்திட்டம் வரும் கல்யாண்டு முதல் செயல்பாட்டு வரும் என  உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அதிரடியாக அறிவித்துள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என கூறியுள்ளார்.

மேலும் இதன்மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என்றும்,  உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டமாக இது கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.அதேபோல் நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் எனவும் பொன்முடி கூறியுள்ளார்.