ஒரே இரவில் கோடீஸ்வரர் - லாட்டரியில் மருத்துவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் அவரது உறவினருக்கு கேரளா அரசின் லாட்டரி குலுக்கலில் 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
மலையாள புத்தாண்டு விஷு பண்டிகையை ஒட்டி கேரளா அரசின் லாட்டரி சீட்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது.
முதல் பரிசாக 10 கோடி ரூபாய்க்கு உரிய லாட்டரி சீட்டு எண் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், பரிசுக்குரிய நபர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் கேரளாவில் ஒட்டுமொத்த மக்களும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என தேடி வந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் என நேற்று தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வரும் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் குமார் மற்றும் அவரது உறவினரான ரமேஷ் ஆகியோர் சேர்ந்து இந்த லாட்டரி சீட்டை ஏற்கனவே திருவனந்தபுரத்திலிருந்து வாங்கிய நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்துள்ளது அவர்கள் அறியாத நிலையில்,
நேற்று தங்களுக்குரிய எண்ணுக்கு தான் பரிசு கிடைத்ததை என அறிந்து திருவனந்தபுரம் விரைந்து லாட்டரி துறை அலுவலகத்திற்கு சென்று விவரத்தை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விரைவில் அவர்களுக்குரிய பரிசு தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு அதிஷ்ட பரிசு கிடைத்தது குறித்து டாக்டர் பிரதீப் குமார் கூறுகையில்;
குலுக்கல் நடைபெற்று மூன்று நாட்களுக்கு பின்னரே தங்களுக்கு கிடைத்த எண்ணில் தான் முதல் பரிசு பெற்று உள்ளது தெரிய வந்தது எனவும்,
அதன் பின்னர் தங்கள் ஊரில் நடைபெற்ற திருவிழா மற்றும் உறவினர் ஒருவரின் மரணம் என பல வேலைகளுக்கு பின்பு நேற்று கேரள அரசு லாட்டரி அலுவலகத்தில் சென்று லாட்டரி சீட்டை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த பரிசு கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறினார்.