1 லட்சத்திற்கு விற்கப்படும் தங்க டீ - அப்படி அந்த டீயில் என்ன உள்ளது?
துபாயில் 1லட்ச ரூபாய்க்கு தங்க டீ விற்கப்படுகிறது.
டீ பழக்கம்
இந்தியாவில்பலரும் காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு டீயை அருந்திவிட்டுதான் தனது நாளையே தொடங்குவார்கள். அந்த அளவுக்கு இந்தியர்களின் கலாச்சாரத்தில் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் பொதுவாக ஒரு டீ குடிக்க ரூ.10 முதல் ரூ. 20 வரை செலவு செய்வோம். அதே ஸ்டார் பக்ஸ், கஃபே காபி டே போன்ற கடைகளில் குடிப்பவர்கள் ரூ.300 வரை செலவு செய்வார்கள்.
தங்க டீ
ஆனால் துபாயில் ஒரு கஃபேயில் ஒரு டீ ரூ.1 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. துபாயில் உள்ள டிஐஎஃப்சியின் எமிரேட்ஸ் பைனான்சியல் டவர்ஸில் சுசேதா ஷர்மா என்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் போஹோ கஃபே என்ற பெயரில் கஃபே நடத்தி வருகிறார்.
இந்த 'கோல்டு கரக் சாய்'(gold karak chai) என்ற பெயரில் விற்கப்படும் டீயின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சம் ஆகும். இந்த டீ மீது 24 கேரட் தங்கத்தால் ஆன காகிதத்தை வைத்து மூடி, வெள்ளியால் ஆன குவளையில் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுவதாகக் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் விரும்பினால், இந்த வெள்ளி குவளையை நினைவுப் பரிசாக தங்கள் வீடுகளுக்கும் எடுத்துச் செல்லலாமாம். இந்த வெள்ளி குவளை இல்லாமல் ரூ. 3,500க்கும் இந்த டீயை அந்த கஃபேயில் வழங்குகிறார்கள்.
தங்க ஐஸ்கிரீம்
மேலும், இதே போல் தங்க தண்ணீர் ரூ.6,897க்கும், தங்க பர்கர் ரூ.6,897க்கும், தங்க ஐஸ்கிரீம் ரூ.9,197க்கும் விற்கப்படுகிறது. அங்கு இந்த தங்க டீயை அருந்திய பெண் அது தொடர்பான வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அங்கு சென்ற ஒருவர் தங்க காபி, தங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டு 6,600 AED(இந்திய மதிப்பில் ரூ.1,51,777)க்கு ரசீது ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். "அது எப்படியும் கடைசியில் கழிப்பறைக்கு தான் செல்லப் போகிறது”, "இதற்கு செலவு செய்தவருக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை” என பலரும் விமர்சித்து வருகின்றனர்.