மலக்குடலில் மறைத்து 2.2 கிலோ தங்கம் கடத்தல் - கோவை விமானநிலையத்தில் வசமாக சிக்கிய 2 பேர் கைது
சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் 2.2 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சார்ஜாவிலிருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று காலை சார்ஜாவிலிருந்து வந்த விமான பயணிகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நசரூதீன் முகமது தம்பி, கலீல் ரகுமான் முஸ்தபா,தஸ்தகீர் காஜா மைதீன், சாதிக் சையது முகமது ஆகிய 4 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விசாரணையில் அவர்கள் ஆடைகளில் மறைத்து வைத்தும், மலக்குடலில் மறைத்து வைத்தும் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இவர்களிடமிருந்து ரூபாய் 1.10 கோடி மதிப்பிலான 2.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த நசரூதீன் முகமது தம்பி, கலீல் ரகுமான் முஸ்தபா ஆகிய இருவரை மட்டும் கைது செய்தனர். மற்ற இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.