தொடர் குறையும் தங்கம் விலை- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. கொரோனாவால் நிலவிய தொழில்துறை தேக்கம், முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திசை திரும்பியது.
அப்போது தங்கத்தின் மீதான முதலீடுகள் ஏக போகமாக அதிகரித்தது. இதனால், தேவை அதிகரித்ததால் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. பின்னர், தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து வந்தது. இதனால், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்களில் விலை ஏற்றமடைந்தாலும் பெரிதளவில் மாற்றம் இல்லை.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,183க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனையடுத்து, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.33,464க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.