தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து- 38 பேர் பலி
சூடானில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் மேற்கு கொர்டாபோன் மாகாணத்தில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அங்குள்ள முக்கிய நகரமான கார்டோமில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புஜா என்ற கிராமத்தில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று திடீரென விபத்து ஏற்பட்டு, இடிந்து விழுந்தது.
இதில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள் அபயக்குரல் எழுப்பினார்கள். மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யாமல் தொழிலாளர்கள் சுரங்கத்தில் இறங்கியதால்தான் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,. சுரங்கத்தில் சில காலமாக பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூடானை பொருத்தளவில் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் சுரங்கத் தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.