மதுமிதாவின் ரீல்ஸ் தன்னை கொள்ளையடிக்க தூண்டியது- கைதான வாலிபர் வாக்குமூலம்
மதுமிதா சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நகை, பணம் தொடர்பான வீடியோக்களை பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார்.
கைதான வாலிபர் வாக்குமூலம்
இசக்கிபாண்டி மதுமிதாவின் சமூக வலைத்தள பக்கத்தை பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் வெளியிட்ட நகை, பணம் தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார்.
மேலும், மதுமிதாவிடம் சாட்டிங் மூலம் வருமானம் தொடர்பாக ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது அவரது முகவரி குறித்த தகவல்களையும் தெரிந்து கொண்டுள்ளார்.
ரூ.30 லட்சம் கடன் இருந்ததால் அதை அடைக்க முடியாமல் இசக்கிபாண்டி தவித்து வந்துள்ளார். இதனால் மதுமிதாவின் வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஆசாரிபள்ளத்தில் வீடு எடுத்து ஒரு மாதமாக தங்கி, மதுமிதாவின் வீட்டை நோட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று மதுமிதாவின் வீட்டின் முன்பு கார் இல்லாததால் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து, சுவர் ஏறி வீட்டுக்குள் சென்று, மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
மதுமிதா வெளியிட்ட வீடியோக்கள் மூலம் வீட்டின் அமைப்பு குறித்து இசக்கிபாண்டிக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பீரோ இருந்த இடத்தையும் அவர் தெரிந்து வைத்திருந்ததால், பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளார்.

பின்னர் நண்பர்களின் உதவியுடன் சில நகைகளை விற்று, அந்த பணத்தில் கடனை அடைக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.
கொள்ளை சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதை பார்த்ததும் இசக்கிபாண்டி அச்சமடைந்து, போலீசாரிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும், தனது அடையாளம் தெரியாமல் இருக்க மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்.
ஆனால், போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இசக்கிபாண்டியை கைது செய்துள்ளனர்.