ஈரோடு இடைத்தேர்தல்; வாக்காளர்களுக்கு கொடுக்க தயாராகும் தங்க காசுகள் - சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு தங்க காசு கொடுப்பதற்காக அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே திமுக, அதிமுக,நாம் தமிழர், பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை சார்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இதே போல அதிமுக சார்பில் தென்னரசு போடடியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற இளம் பெண் போட்டியிடுகிறார். இவர்களை தவிர தேமுதிக வேட்பாளர் ஆனந்த் களத்தில் உள்ளார்.
சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக - காங்கிரஸ்,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களுக்கு சேலை,குக்கர், பணம் உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே ஐபிசி தமிழுக்கு பேட்டி அளித்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அமைச்சர் செந்தில் பாலாஜி 36 பூத்துகளை தன் வசம் வைத்திருப்பதாகவும், ஆளும் கட்சி திமுக மற்றும் அதிமுக வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு தங்க காசு கொடுப்பதற்காக கரூர் மற்றும் பெரம்பலுாரில் தங்க காசு அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.