திடீர் பணக்காரரான தினக்கூலி தொழிலாளி; கால்வாயில் அடித்த அதிர்ஷ்டம் - கடைசியில் ட்விஸ்ட்!
நபர் ஒருவரிடம் இருந்து தங்க கட்டி மற்றும் ரூ.1,10,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திடீர் பணக்காரர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரைச் சேர்ந்த தம்பதி முருகன் - கவுரி. தினக்கூலி வேலைக்கு சென்று வந்த முருகன் திடீரென லட்சங்கள் செலவு செய்து வசதியாக வாழ ஆரம்பித்துள்ளார்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு முருகன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து சில இளைஞர்கள் அவரை, உங்களிடம் தங்க பிஸ்கட்டுகள் இருப்பது தெரியும் எனவும் அதில் தங்களுக்கும் தர வேண்டும் என கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன முருகன், ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்க, அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
சிக்கிய தங்கக்கட்டி
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையின்போது, வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட் மற்றும் ரூ.1,10,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை முருகன் எடுத்து போலீசாரிடம் கொடுத்தார்.
முருகனும் அவரது மனைவியும் அரக்கோணத்தில் உள்ள நகைக்கடைகள் அடங்கிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் மண்ணை தண்ணீருடன் சேர்த்து ஜலித்து எடுப்பது வழக்கம். அப்போது ஒருமுறை பிஸ்கட் கட்டி கிடைத்ததாகவும், அதில் பகுதியை விற்று பணமாக்கியதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்க கட்டிகளை காணவில்லை என யாரும் புகார் கொடுக்காததால் முருகன் மற்றும் அவரது மனைவியிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி விட்டனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டி மற்றும் பணத்தை அரசு கருவூலத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.