கனவு நகரமான கோவாவின் வரலாறும் - தேசியக் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடும்..!
இந்தியா சுதந்திரமடைந்த பின்னாலும், போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நகரம் கோவா தான்.
தனிமாநிலம்
அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு பலமுறை கோவாவை இணைக்க வேண்டுகோள் விடுத்தும், எச்சரித்தும் கொஞ்சம் கூட போர்ச்சுக்கீசியர்கள் செவிசாய்க்கவில்லை. கோவாவுக்குள் நுழைந்த இந்தியப் படை, வெறும் எட்டாயிரம் பேருடன் இருந்த போர்ச்சுக்கீசிய படையினரை மிக எளிதாகக் கட்டுக்குள் கொண்டுவந்தது.
யூனியன் பிரதேசமாக இருந்துவந்த கோவா, 1987-ம் ஆண்டு மே 30-ம் தேதி இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. குறைவான பரப்பளவையும் குறைவான மக்கள் தொகையையும் கொண்டு இந்தியாவின் மிகச்சிறிய நான்காவது மாநிலமாக கோவா விளங்குகிறது. இங்கு, கொங்கனி, மராத்தி, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுகின்றனர். பெரும்பான்மையாக இந்துக்களும், அதற்கடுத்தாக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், கணிசமாக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
தயானந்த் பந்தோட்கர்
இந்தியாவிலேயே பொது சிவில் சட்டம் அமலில் இருப்பதும் ஆசியாவில் உள்ள ஒரே கடற்படை விமான அருங்காட்சியகம் இருப்பதும் கோவாவில் மட்டும்தான். பனாஜி இம்மாநிலத் தலைநகரம். வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகவும் இருக்கிறது.முதல் முதலமைச்சராக, கோவா சுதந்திரப் போராட்ட வீரரான தயானந்த் பந்தோட்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 'மகாராஷ்டிரவாதி கோமந்தக்' எனும் கட்சியை நடத்தி வந்தார்.
இது சுருக்கமாக, எம்.ஜி.பி என அழைக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக இருந்த காலத்தில், கோவாவை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் எனப் போராடியவர் தயானந்த் பந்தோட்கர். கோவா தனி மாநிலமாக இருக்கவேண்டும் என 'ஐக்கிய கோவன் கட்சி' போராடியது. தொடர்ந்து 1967-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் கோவா தனி மாநிலமாக நீடிக்க வேண்டும் என்றே பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர். தொடர்ந்து, தயானந்த் பந்தோட்கர் தன்னுடைய கோரிக்கையைக் கைவிட்டார்.
சசிகலா பந்தோட்கர்
ஆனால், 1963-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா இணைப்புக் கோரிக்கையை முன்வைத்தே தயானந்த் பந்தோட்கர் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து, அவருடைய மகள், சசிகலா பந்தோட்கர் முதல்வராகப் பதவியேற்றார். அதே நேரத்தில், தனிக் கோவா கோரிக்கையை முன்வைத்த ஐக்கிய கோவன் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கணிசமான இடங்களில் தங்களின் வெற்றியைப் பதிவு செய்து வந்தன.
தொடர்ந்து, சசிகலா பந்தோட்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது, கட்சியில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவற்றின் காரணமாக மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மிகப்பெரிய சரிவைக் கண்டது. 1990-களுக்குப் பிறகு பாரதிய ஜனதாக் கட்சியும் வளர்ச்சி பெற கோவை தேசியக் கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது. முதன்முதலில் 1994-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து நான்கு இடங்களில் வெற்றி பெற்றது பாஜக தொடர்ந்து அசுர வளர்ச்சியடைந்த பாஜக வடக்கு மற்றும் தெற்கு கோவா, நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி, மக்களவையில் தங்களின் வெற்றிக் கணக்கை 1999-ம் ஆண்டில் தொடங்கியது.
மனோகர் பாரிக்கர்
தொடர்ந்து இருபது ஆண்டுகளாக வடக்கு கோவா தொகுதியில் பாஜக தான் வெற்றி பெற்று வருகிறது. தெற்கு கோவாவைப் பொறுத்தவரை, 1999-க்குப் பிறகு, 2014-ல் ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பாலும் காங்கிரஸின் கோட்டையாகத்தான் தெற்கு கோவா தொகுதி விளங்கி வருகிறது. 1999 சட்டமன்றத் தேர்தலில், கோவா மக்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உதவி புரிந்ததுடன், சட்டமன்ற எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது பாஜக.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் பிற மாநிலக் கட்சிகளும் மட்டுமே ஆட்சி புரிந்த வந்த கோவா மண்ணில் முதல்முறையாக 2000-ம் ஆண்டில் ஆட்சி அமைத்தது. பாஜக மனோகர் பாரிக்கர் கோவாவின் முதல்வரானார். தொடர்ந்து, 2005-2012 காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் ஆட்சியில் இருந்தன. மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
பிரமோத் சாவந்த்
2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயரை, கோவாவில் நடைபெற்ற தேசிய நிர்வாகக் கூட்டம் ஒன்றில், முன்மொழிந்தவரும் இவர்தான். கொள்கையைத் தாண்டி அனைவரிடமும் நட்பைக் கடைப்பிடித்தார். கணையப் புற்று நோயின் காரணமாக, இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி மறைந்தார். அதனைத் தொடர்ந்து கோவா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, பிரமோத் சாவந்த் 13வது முதல்வராகப் பதவி ஏற்றார்.
தற்போது வரை இவர் தான் கோவாவை ஆட்சி செய்து வருகிறார்.
நாட்டின் பிற மாநிலஙகளின் ஆட்சிகள் தேசியக் கட்சிகளில் இருந்து மாநிலக் கட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால், கோவாவின் ஆட்சி மாநிலக் கட்சிகளில் இருந்து தேசியக் கட்சிகளுக்கு நகர்ந்திருக்கிறது.