தரையிறங்க வந்த விமானம்; புறப்பட்ட இடத்துக்கே திருப்பி விட்ட தெரு நாய் - என்ன நடந்தது?
தெருநாயால் தரையிறங்காமல் விமானம் ஒன்று புறப்பட்ட இடத்துக்கே திரும்பிச் சென்ற சம்பவம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
திரும்பச் சென்ற விமானம்
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UK881 என்ற விமானம் நேற்று மதியம் கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.
அங்கு வந்தடைந்த விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில், தெருநாய் ஒன்று ஓடுபாதையில் அலைந்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட விமானி, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் பெங்களூரு விமான நிலையத்துக்கே திருப்பினார்.
இதனையடுத்து பெங்களூரிலிருந்து மாலை 04:55 மணியளவில் விமானம் புறப்பட்டு, மாலை 06:15 மணியளவில் கோவாவை வந்தடைந்துள்ளது. இதுகுறித்த நகர்வுகளை விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனுக்குடன் தங்களது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்தது.
தெரு நாயால் சோதனை
மேலும், இந்த சமத்துவம் தொடர்பாக பேசிய கோவா விமான நிலைய இயக்குநர் எஸ்.வி.டி.தனம்ஜெய ராவ் "டபோலிம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தெருநாய் காணப்பட்டதால், விமானியிடம் சிறிது நேரம் தாக்குப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், விமானத்தை அவர் பெங்களூருக்கே திரும்ப விரும்பினார். விமான ஓடுபாதையில் எப்போதாவது தெருநாய் நுழையும் சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், அங்கிருக்கும் ஊழியர்களால் உடனடியாக அந்தப் பகுதி சரிசெய்யப்பட்டுவிடும். இருப்பினும், என்னுடைய இந்த ஒன்றரை ஆண்டுக்கால பதவிக்காலத்தில் இவ்வாறு நடப்பது இதுவே முதன்முறை" என்று அவர் கூறியுள்ளார்.