இந்தியாவை புகழ்ந்து பேசிய இம்ரான் கானுக்கு நேர்ந்த சிக்கல்
எந்த வல்லரசு நாடாலும் இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் இம்ரான் தெரிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது.
ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார். மேலும் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் செயல்படுவார் என்றும், அங்கு 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், தனது பேச்சில் இந்தியவை புகழ்ந்து பேசியிருந்தார்.
அதாவது இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்கள். மேலும், எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு ஆணையிட முடியாது. எந்த வல்லரசு நாடாலும் இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது எனவும் இம்ரான் கான் தெரிவித்தார். இந்நிலையில் இம்ரான் கானின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது உங்களுக்கு இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், அங்கேயே நீங்களும் சென்றுவிடுங்கள். பாகிஸ்தான் வாழ்க்கையை விட்டுவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.