“தமிழில் கல்யாண பத்திரிக்கை” - தமிழக பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ள நிலையில் அவர்களின் திருமண பத்திரிக்கை வெளியாகி வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டராக அதிரடியாக ஆடக்கூடிய கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய நிலையில், மீண்டும் ஏலத்திற்கு முன்பே அந்த அணி தக்க வைத்துக் கொண்டது.
இதனிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா பெண் வினி ராமனை மேக்ஸ்வெல் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
பல் மருத்துவராக பணியாற்றி வரும் வினி ராமன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். இந்நிலையில் தான், மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம், வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களின் திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில் அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் - வினி ராமன் ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.