முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனம் மீது சில்வர் குவளை வீச்சு - பரபரப்பை ஏற்படுத்திய டீக்கடை மாஸ்டர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தின் மீது சில்வர் குவளையை வீசிய டீக்கடை காரரால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சேத சீரமைப்பு பணி மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்றார்.
நகர்கோவில் மற்றும் பேயன் குழி, உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பணிகளை மாலை 4 மணிக்கு மேல் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.
முன்னதாக நெல்லை மாவட்ட காவல் கிணறு எல்லையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நெல்லை வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனிடையே காவல்கிணறு விலக்கு அருகே முதல்மைச்சர் கடக்கும்போது அந்த பகுதியில் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் சில்வர் கிளாஸ் ஒன்றை முதல்மைச்சரின் வாகனத்தின் மீது வீசினார்.
மேலும் அந்த நபர் அந்த வழியாக வந்த பேருந்து ஒன்றில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் சம்பவம் அறிந்து அங்கு வந்த திமுக பிரமுகர்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று அந்த கடையை மூட உத்தரவிட்டனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில் அந்த குறிப்பிட்ட டீக்கடை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் திறந்து வைக்கப்பட்டதாகவும், 2 தினங்களுக்கு முன்பு தான் கடையில் டீ மாஸ்டராக பாஸ்கர் வேலைக்கு சேர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் பாஸ்கரை தேடி வருகின்றனர்.