உங்களுக்காக நான் இருக்கிறேன் தந்தையாக - பாலியல் வன்கொடுமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25, சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில், பெண்கள் மீது நிகழும் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், இந்த தினத்தை குறிப்பிட்டு, தற்போது தமிழகத்தில் அதிகமாக பதிவாகும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் - அவற்றின் தொடர்ச்சியாக நிகழும் தற்கொலைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
அதில் அவர், “உடல் ரீதியாக, பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செய்யப்படும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக, பல சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களின் முன்னால் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டு, அவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என உறுதியளித்துள்ளார். பள்ளிகளில், கல்லூரிகளில், வேலை செய்யும் இடங்களில் பல பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அவற்றில் ஒருசிலதான் வெளியே தெரியவருகிறது. மற்றதெல்லாம் அப்படியே மறைக்கப்படுகிறது. மனசாட்சியற்ற மனிதர்களால் நம் பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை, நாம் நாகரீகத்தையும் பண்பாட்டையும் பற்றி பேசுவதில் எந்தப் பொருளும் இல்லை.

சக உயிராக பெண்ணை பார்க்கும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் தோன்றாதவரை, இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியாது. உடல் ரீதியாக ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக நம்மிடையே பல சட்டங்கள் உள்ளன. அத்தகைய சட்டங்கள் முன்னால் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அதற்கு, நான் இந்த இடத்தில் உறுதியளிக்கிறேன். இந்த விஷயத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி, ஆசிரியர்களுக்கும் காவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் எல்லா பாடபுத்தகத்திலும் 14417 என்ற மாணவர்கள் உதவி எண், வரும் கல்வியாண்டு முதல் அச்சிடப்பட்டு வெளியிடப்படும். 1098 என்ற குழந்தைகள் புகார் எண் குறித்தும் அதிகம் விழிப்புணர்வு செய்யப்படும், செய்யப்பட்டு வருகிறது.
ஆகவே அன்புக் குழந்தைகளே... உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு உள்ளது. முதலமைச்சராக மட்டுமன்றி, தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதனால் தயவுசெய்து, யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாமென உங்களையெல்லாம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்கையில், அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம்சாட்டிவிட்டு மறைந்து போகிறார் என்று பொருள். எப்போதும், வாழ்ந்துதான் போராடனும். வாழ்ந்துக் காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களிடம் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்று தரமுடியும்.
அதனால், யாரும் தற்கொலை செய்துக்கொள்ளவேண்டாமென, உங்கள் தந்தையாக - உங்கள் சகோதரனாக - உங்கள் வீட்டில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன். உங்களைப் பார்த்துக்க, நாங்க இருக்கோம், நான் இருக்கேன், அரசாங்கம் இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வராக அல்ல... தந்தையாக! #InternationalDayForEliminationOfViolenceAgainstWomen pic.twitter.com/PwU5wKNQQU
— M.K.Stalin (@mkstalin) November 26, 2021