சிறுமியை நிர்வாணப்படுத்துவது பாலியல் வன்கொடுமை முயற்சியல்ல - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!
சிறுமியை நிர்வாணப்படுத்துவது பாலியல் வன்கொடுமை முயற்சியல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை?
ராஜஸ்தான், டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் சுவாலால். இவர் 1991ல் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது பெண் குழந்தையை இரவில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியின் ஆடை மற்றும் உள்ளாடைகளை வலுக்கட்டாயமாக கழற்றி நிர்வாணப்படுத்தியதால், சிறுமி கத்தியதில் கிராம மக்கள் ஓடி வந்துள்ளனர். இதனால் சுவாலால் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இதுகுறித்து புகாரளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் சுவாலால் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார்.
நீதிமன்ற தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப்குமார், 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பளித்தார். அதில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தியது பாலியல் வன்கொடுமை முயற்சி இல்லை. பாலியல் வன்கொடுமை முயற்சி என்றால், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆடைகளை கழற்றியதையும் தாண்டி சென்றிருக்க வேண்டும்.
அவ்வாறு எந்த நடவடிக்கையும் இந்த வழக்கில் இல்லாததால், இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின் கீழ், ஒரு பெண்ணின் நாகரீகத்தை மீறுதல் என்ற குற்றத்தின் அடிப்படையில் தான் தண்டனை வழங்க முடியும் என வழக்கை ரத்து செய்து, மானபங்க செயலுக்கான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.