இளைய தலைமுறையே உஷார்...! பவர் பேங்க் மாட்டிக் கொண்டு செல்போனில் பேசிய பெண் மீது மின்சாரம் பாய்ந்தது

Tamil nadu Chengalpattu
By Thahir Jan 16, 2023 10:30 AM GMT
Report

தாம்பரத்தில் உயர் மின் அழுத்த மின்சார வயர் அருகே பவர்பேங்க் மாட்டிக்கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநில இளம்பெண் மீது மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. மேலும் பெண்கள் விடுதி முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் 2 இளம் பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

பவர் பேங்க் போட்டுக் கொண்டு செல்போனில் பேசிய இளம்பெண் 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் ஏராளமான தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேற்கு தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை பகுதியில் வசித்து வருகின்றனர்.

திருநீர்மலை சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்கள் தங்கி மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

அந்த கட்டிடத்தின் அருகில் துணை மின் நிலையத்திற்கு செல்லும் 110 கேவி உயர் அழுத்த மின்சார ஒயர் செல்கிறது. கட்டிடத்தின் முதல் மாடியில் பெயிண்ட் அடிப்பதற்காக ஏற்கனவே அங்கு இருந்த கிரில்களை அகற்றி வைத்திருந்தனர்.

இந்நிலையில் அறையில் தங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி (வயது 19) என்பவர் இன்று காலை செல்போனில் சார்ஜ் இல்லாததால் power Bank மூலம் சார்ஜ் போட்டுக் கொண்டே உயர் அழுத்த மின்சார ஒயர் செல்லும் பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார்.

ஈரத்துணியை எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்தது

அங்கு காய போட்டிருந்த துணி கீழே விழுந்ததால் கிரில் கேட் வழியாக பிளாஸ்டிக் நாற்காலியை போட்டு துணியை எடுக்கும்போது உயர் அழுத்த மின்சார வயரிலிருந்து கதிர்வீச்சு குமாரி மீது பாய்ந்ததில் அவர் உடல் கருகி படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

girl-was-electrocuted-while-talking-on-her-cell

மேலும் அந்த கட்டிடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தில், அங்கிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பூனம் வயது 20, ஊர்மிளா குமாரி வயது 24 ஆகியோரையும் மின்சாரம் தாக்கியது.

மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்தினர். இதில் படுகாயம் அடைந்த கும்கும் குமாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தடைய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விடுதி மேலாளர் கணேஷ் கட்டிட உரிமையாளர் நடராஜ் விடுதி மேற்பார்வையாளர் தமிழ்அழகி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.