ஷார்ட்ஸ் அணிந்து வந்ததால் தேர்வு எழுத அனுமதி இல்லை - கதறி அழுத மாணவி
ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஒலிம்பிக் களத்தில் ஹாக்கி பந்தை விரட்டிய மங்கைகள் இன்று நம் தேசத்துக்கு புதிய பெருமித அடையாளத்தைத் தேடித் தந்துள்ளனர். ஆனால், அசாம் மாநிலத்தில் ஷார்ட்ஸ் அணிந்து வந்ததாலேயே தேர்வு எழுத ஒரு சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் தேஜ்பூர் நகரில் கடந்த புதன்கிழமையன்று அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 19 வயதான ஜூப்ளி தமுலி தனது தந்தையுடன் தேர்வு மையத்துக்குச் சென்றார்.
ஜிப்ஸ் எனப்படும் கிரிஜாநந்தா சவுத்ரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மாசிடிகல்ஸ் சயின்சஸ் மையத்தில் தேர்வு எழுதவிருந்தார். ஆனால், தேர்வு அனுமதி அட்டையுடன் சென்ற அவரை உள்ளே அனுமதிக்க தேர்வு கண்காணிப்பாளர்கள் மறுத்தனர்.
ஜூப்ளி அணிந்திருந்த ஷார்ட்ஸ், டிஷர்ட் உடையே அதற்குக் காரணம். இப்படியொரு உடையை அணிந்து கொண்டு தேர்வு எழுத முடியாது எனக் கூறியுள்ளனர். அதிர்ந்து போன மாணவி இதே உடையில் தான் கடந்த வாரம் நீட் தேர்வு எழுதினேன் என்று சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உடனே, மாணவியின் தந்தை 8 கி.மீக்கு அப்பால் இருக்கும் கடைக்குச்சென்று மகளுக்கு பேன்ட் வாங்கச் சென்றார்.
அதற்குள் நேரம் ஓடிக் கொண்டிருக்க மாணவி அழுது புலம்பினார். உடனே தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஜன்னல் திரைச்சீலை ஒன்றை எடுத்துவந்து கொடுத்துள்ளனர்.
மாணவி இடுப்பில் அதை சுற்றிக் கொண்டு பின்னர் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். இது குறித்து மாணவி ஜூப்ளி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், இது மிகப்பெரிய அநீதி. தேர்வு மையத்தில் உடல் வெப்பம் பரிசோதிக்கவில்லை, மாஸ்க் பற்றி கேள்வி கேட்கவில்லை.
ஆனால், எனது ஷார்ட்ஸ் மட்டும் அவர்களுக்கு சர்ச்சையாக இருந்துள்ளது. தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் உடைக்கட்டுப்பாடு குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், நான் நீட் தேர்வுக்கு அணிந்து சென்ற அதே உடையை இங்கேயும் அணிந்து வந்தேன்.
தேர்வுக்கு வரும்போது எத்தகைய உடை அணிய வேண்டும் என்ற பொது அறிவு கூட எனக்கு இல்லை என்று அவர்கள் விமர்சித்தன என்றும் கூறினார்.