பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை பறித்துச் சென்ற கொள்ளையன் - விரட்டிப் பிடித்த இளைஞர்கள் - குவியும் பாராட்டு
நுங்கம்பாக்கத்தில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் பறித்துச் சென்ற கொள்ளையர்களை விரட்டி பிடித்து பணத்தை மீட்ட இளைஞரை போலீசார் பாராட்டியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் கிராமா தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்து கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் தனது இருசக்கர வாகனத்தில் கார்த்தி சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் 2 பேர், கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்து சென்றனர். உடனே கார்த்தி, வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி பிடித்தார். அதில் ஒரு நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயற்சி செய்ய, அதை லாவகமாக தடுத்து அந்த நபரை தாக்கி கீழே தள்ளினார் கார்த்தி.
அருகே இருந்த பொதுமக்கள் உதவியுடன், பணப்பையை மீட்டு அந்தப் பெண்ணிடம் கார்த்தி கொடுத்தார். மற்றொரு கொள்ளையர் தப்பி ஓடி விட்டார். அந்த கைப்பையில் ரூ.1 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்த போலீசார் அந்த கொள்ளையனை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், பிடிபட்டவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த முக்தார் உசேன் என்பதும் தப்பிச் சென்றவர் பெரம்பூரைச் சேர்ந்த ஹாலித் என்பதும் தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு இருப்பதும் தெரியவந்தது.
கொள்ளையடித்த நபரை பிடித்த இளைஞர் கார்த்தி, வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக பாக்ஸிங் கற்று வந்திருக்கிறார். தனது பெற்றோர் நடத்தும் தெருவோர தள்ளுவண்டி பிரியாணி கடையில் வேலை பார்த்தவாறு படிக்கிறார்.

அவரது தாயார் கலைவாணி கூறுகையில், 'குற்றவாளிகளை பிடிச்சுக் கொடுத்த என் பையன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. பாக்ஸிங் கிளாஸ் போறப்போ பயமா இருந்த எனக்கு, இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு' என்றார்.
தன் உயிரை மதிக்காமல் கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த கார்த்தியை காவல் துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.