வேறு சமூக இளைஞரை காதலித்த இளம்பெண் ஆணவக் கொலை - கொடூர பின்னணி
வேறு சமூக இளைஞபரை காதலித்த இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண் ஆணவக் கொலை
திருப்பூர் பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகள் வித்யா(22). கோவை அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. மாலையில் வீடு திரும்பியபோது பார்க்கையில், பீரோ சரிந்து வித்யா தரையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். உடனே போலீஸுக்கு தகவல் அளிக்காமல் உடலை புதைத்துள்ளனர்.
இதற்கிடையில், வித்யா தன்னுடன் கல்லூரியில் படித்த திருப்பூரைச் சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வித்யாவை பெண் கேட்டு வெண்மணி குடும்பத்தார் வந்துள்ளனர். ஆனால் இந்த காதலை வித்யாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அண்ணன் வெறிச்செயல்
இருப்பினும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தநிலையில், வித்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் -ஆப் ஆகி இருந்துள்ளது. எனவே, நேரில் பார்க்க வந்ததில், காதலி இறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் இதில் அவருக்கு சந்தேகம் இருந்ததால் போலீஸில் புகாரளித்துள்ளார்.
மேலும், கிராம வி.ஏ.ஓ.வும் வித்யா மர்மமாக இறந்ததோடு, யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் உடலை புதைத்து விட்டதாக புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
பின் தீவிர விசாரணையில், மாற்று சமுதாய இளைஞரை காதலித்ததால், தனது தங்கை வித்யாவை தான் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றதாக, அண்ணன் சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.