தொடரும் சிறுத்தை தாக்குதல்: ஒருவர் பலி, 4 வயது சிறுமி காயம் - கண்டுகொள்ளுமா அரசு..?
சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி காயமடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை தாக்குதல்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், கொளப்பள்ளி பகுதிகளில் வனவிலங்கு தாக்குதலால் மக்கள் உயிரிழப்பது வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த பகுதிகளில் காட்டுயானைகள், கரடிகள், சிறுத்தைகள் நடமாட்டத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் வேலைக்காகவும், அத்தியாவசிய தேவைக்காக கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பெரும் அச்சத்துடனேயே பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
கடந்த மாதம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த 3 பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் கோவையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மக்கள் போராட்டம்
இந்நிலையில் நேற்று சேரங்கோடு அடுத்துள்ள சேவியர்மட்டம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகா என்ற 4 வயது சிறுமியை சிறுத்தை தாக்கியது.
அப்போது அங்கிருந்த மக்கள் எழுப்பிய சத்தத்தில் சிறுத்தை தப்பியோடியது. இதனையடுத்து காயமடைந்த சிறுமி கிருத்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் வனவிலங்கு தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொளப்பள்ளி பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது வருகின்றனர்.
தினமும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வரும் தங்களை தொடர் கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.