காதலனை துப்பட்டாவால் கட்டிப்போட்டு மாணவியை 3 ரவுடிகள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, 24 வயதான தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் கடந்த 23-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது பத்மாஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய 3 ரவுடிகள் இந்த காதல் ஜோடியை தாக்கி ஹரிகிருஷ்ணனிடம் இருந்த செல்போன் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்யச் சென்றபோது அவர்கள் போலீசாரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் பத்மாஸ்வரனையும், தினேஷ்குமாரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய அஜித்குமாரையும் திருப்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஊர் திரும்பிய ஹரிகிருஷ்ணன் இச்சம்பவத்தால் மனவேதனை அடைந்து விஷம் குடித்ததால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
மேலும் மாணவியும், தனது வீட்டு தோட்டத்தில் விஷம் குடிக்க முயன்ற போது பெற்றோர் அவரை தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, அருப்புக்கோட்டை முதலாவது மாஜிஸ்திரேட்டு மணிமேகலாவிடம் அளித்த வாக்குமூலத்தில், “தனது காதலனை துப்பட்டாவால் கட்டிப்போட்டு விட்டு தன்னை அந்த 3 ரவுடிகளும் பாலியல் வன்கொடுமை செய்தனர்” என கூறியிருப்பதாக தெரிகிறது.
காதல் ஜோடியை தாக்கியது தொடர்பாக ஏற்கனவே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் மாஜிஸ்திரேட்டிடம் மாணவி அளித்த வாக்குமூலம் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால் இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.