இதயநோயால் இறந்த காதலி ... முகம் பார்க்காமல் மலர்ந்த காதலால் காதலன் எடுத்த விபரீத முடிவு
கள்ளக்குறிச்சி அருகே இதயநோயால் காதலி இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் மணிகண்டன் 8 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது புகைப்பட கலைஞராக உள்ளார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு முகநூல் மூலமாக பூமிகா என்கிற பெண் அறிமுகமான நிலையில் முதலில் இருவரும் நண்பர்களாக பேசி வந்துள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது.
இருவரும் நேரில் சந்தித்தது கூட இல்லை என்றாலும் மணிகண்டன் பூமிகாவை ஆழமாக காதலித்து வந்துள்ளார். பூமிகாவை நேரில் சந்தித்து தனது காதலை எப்படியாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என காத்திருந்த மணிகண்டனிடம் பூமிகா கடந்த சில நாட்களாக தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் பூமிகாவுக்கு என்ன ஆனது என தெரியாமல் மணிகண்டன் தவித்து வந்தார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு மணிகண்டன் தொடர்பு கொண்ட நிலையில், , சில தினங்களுக்கு முன்பு பூமிகாவின் பாட்டி செல்போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது பூமிகா பற்றி கேட்கவே, இதய நோய் பாதிப்பு காரணமாக பூமிகா இறந்து விட்டதாக பாட்டி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் இதய நோயால் காதலி சென்ற இடத்துக்கே சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். மயக்கமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரிடம் மணிகண்டனிடம் குடும்பத்தினர் நடத்திய விசாரணையில் தான் பூமிகா என்கிற பெண்ணை காதலித்ததாகவும், அவர் இறந்து விட்டதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காமல் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.