“இனிமேல் வீட்டை விட்டு வெளிய போவியா?” - சிங்கக்குட்டியை அலேக்காக தூக்கிச் செல்லும் இளம்பெண்
குவைத்தில் தெருக்களில் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை இளம்பெண் ஒருவர் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆபத்தான காட்டு விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் வளைகுடா நாடுகளில் சகஜமாக காணப்படுகிறது. காட்டையே நடுங்க வைக்கும் சிங்கங்கள் கூட அதன் உரிமையாளர்களைக் கண்டால் குழந்தையாக மாறி விடுகின்றன.
வளைகுடா நாடுகளில் ஒரு சிறுத்தைக் குட்டி இந்திய மதிப்பில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் தற்போது குவைத் நாட்டில் தெருவில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டியை ஒரு இளம்பெண் அலேக்காக தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குவைத்தில் உள்ள சாபியா பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கக்குட்டி அங்கிருந்து வெளியே தப்பிச் சென்றுள்ளது. இது குறித்து அதன் உரிமையாளர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அந்த சிங்கக்குட்டியை வளர்த்த இளம்பெண் அந்த சிங்கம் சாலையில் சுற்றித்திரிவதை கண்டு குழந்தையை தூக்குவது போல தூக்கிச் செல்வது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.