செஞ்சி சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்- டிஜிபி உத்தரவு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டு கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போனார்.
இதையடுத்து, 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுமியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 10 நாட்களாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் 20 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இருப்பினும், சிறுமி குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, ஆலம்பூண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மலைப் பகுதிகள், கரும்புத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளில் காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 10 நாட்களைக் கடந்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.