பிரதமர் மோடி கசப்பானவர் என்று நினைத்தேன்…ஆனால் அவர் மனிதநேயம் மிக்கவர்… - குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்தான் குலாம்நபி ஆசாத். இவர் காஷ்மீரின் மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருக்கிறார்.
கட்சியிலிருந்து விலகல்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரான குலாம் நபி ஆசாத் அண்மைக் காலமாக அதிருப்தியில் இருந்து வந்தார். இவர் காங்கிரசில் உட்கட்சி சீர்திருத்தம் தேவை என்று குரல் கொடுத்த அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய குழுவை சேர்ந்தவர்.
காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் கடந்த 26-ந் தேதி குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து விலகினார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கெனவே மூத்த தலைவர்களான கபில் சிபில் உள்ளிட்ட பலர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், இவரது விலகலும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி மனிதநேயமிக்கவர்
இந்நிலையில், குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது -
காங்கிரசில் பல கூட்டங்கள் நடந்திருக்கு. ஆனால், கூட்டத்தில் ஒரு முடிவு கூட எடுக்கப்படவில்லை. காங்கிரசிலிருந்து நான் வெளியேறுவதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். காங்கிரஸ் கட்சியில் சிலர் என் மீது குற்றச்சாட்டை சுமத்தினார்கள். காங்கிரசில் விரோதிகள்தான் முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரசிலிருந்து வெளியேற மோடியை ஒரு காரணமாக சொல்வது சாக்குபோக்குதனமானது. காங்கிரஸ் தலைமை குறித்து ஜி23 கடிதம் எழுதப்பட்டதிலிருந்தே எனக்கும், காங்கிரசாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
தனிப்பட்ட முறையில், அவர்களது நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். பா.ஜ.வில் இணையப் போவதில்லை. இன்னும் 10 நாள்களில் புதிய கட்சி தொடங்கப் போகிறேன். பிரதமர் மோடியை கசப்பான மனிதர் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் மனித நேயத்தை காட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.