உக்ரைன் போரின் மிக முக்கிய வீரர் மரணம்...என்ன நடந்தது?
ரஷ்யாவின் 40 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி உக்ரைன் விமானி மரணமடைந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து 66வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான மனித உயிரிழப்புகள்,பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் போரை நிறுத்த ரஷ்யா இதுவரை முடிவு எடுக்கவில்லை.
இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.உக்ரைன் தொடர்ந்து போராடி வருவதால் அதன் தலைநகர் கீவ்வை இன்று வரை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் போரின்போது 40 ரஷ்ய விமானங்களை தனி ஆளாக சுட்டு வீழ்த்தி புகழ்பெற்ற விமானி மேஜர் ஸ்டீபன் தரபால்கா (வயது 30) மரணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிக் 29 ரக விமானத்தில் பறந்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வந்த இவர் போர் தொடங்கியது முதல் ரஷ்யா படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். போரின் முதல் நாளில் மட்டும் 10 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியதால் ஸ்டீபனை கீவ் நகரின் பேய்(Ghost Of Kyiv) என அழைக்க தொடங்கினர்.
இதனிடையே மார்ச் 13 ஆம் தேதி நடந்த தாக்குதலில் இவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இதுதொடர்பான விபரம் தற்போது தாமதமாக வெளியாகியுள்ளதாகவும் பிரிட்டன் செய்தி நிறுவனமான ‛டைம்ஸ் ஆப் லண்டன்' தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைனுக்குள் பறந்தன. ரஷ்யாவின் பெரிய ராணுவத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய உக்ரைன் படைகள் சரணடைய முடிவு செய்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டீன் தரபால்கே ரஷ்ய போர் விமானங்களை எதிர்த்து சண்டையிட விரும்புவதாக கூறினார்.
ஆனால் திறமையான வீரரை இழக்க விரும்பாத உக்ரைன் அரசு முதலில் மறுத்தது. பிறகு அவரது முடிவுக்கு உடன்பட்டதால் தனியாக புறப்பட்ட ஸ்டீபன் 'மிக் - 29' போர் விமானத்தில் பறந்து ரஷ்யா விமானங்களை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு வீழ்த்தினார். இதனால் கோபமான ரஷ்ய படையினர் அவரது போர் விமானத்தை சுற்றிவளைத்து சுட்டு வீழ்த்தின. இதில் ஸ்டீபன் தரபால்கே மரணமடைந்தார்.
மேற்கு உக்ரைனில் உள்ள கொரோலிவ்காவ் கிராமத்தில் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்த இவரின் பெற்றோர் தொழிலாளிகளாக இருந்தனர். சிறுவயது முதலே விமானம் இயக்குவதை ஆர்வமாக கொண்டு படித்து வந்த ஸ்டீபன் உக்ரைன் விமானப்படையில் விமானியாக பணியில் சேர்ந்து அவரது கனவை நனவாக்கினார். இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். இதற்கிடையில் இவரது பணியை பாராட்டி உக்ரைன் சார்பில் சிறப்பு பதக்கமான ‛ஆர்டர் ஆப் தி கோல்டன் ஸ்டார்' வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.