முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாக செலுத்து நடவடிக்கை எடுக்கணும் : ஓபிஎஸ் அறிக்கை

admk ops request freevacination
By Irumporai Apr 13, 2022 07:30 AM GMT
Report

மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செலுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெலியிட்டுள்ள அறிக்கையில் :

கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக அனைவருக்கும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தும் முறையை மாநில அரசுகள் மூலமாக மத்திய அரசு இலவசமாக நடைமுறைப்படுத்தி, அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன்மூலம், கோடிக்கணக்கான மக்கள் கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள். இந்திய மக்களுக்கான இந்த இலவசத் தடுப்பூசித் திட்டம் அனைவர் மத்தியிலும், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்று நோய் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என உருமாறி வருவதன் காரணமாக, இருமுறை தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒன்பது மாதம் கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் அறுபது வயதை கடந்தவர்களுக்கு, கூடுதல் பாதுகாப்பாக, மூன்றாவது முறையாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கொரோனா தொற்று நோய் மீண்டும் உருமாறியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த அலை குறித்து மருத்துவ வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூட இது குறித்து பேசி இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், மக்களுக்கு ஒரு கூடுதல் பாதுகாப்பினை தரும் பொருட்டு இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஒன்பது மாதங்கள் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்வதற்கான வசதி தனியார் தடுப்பூசி மையங்களில் இந்த மாதம் 10ம் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும்.

இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்கான கட்டணம் சேவைக் கட்டணம் உட்பட 375 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும், இது தொடர்பான நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று ஓரளவு குறைந்து பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கட்டணம் மக்களுக்கு ஒரு கூடுதல் சுமை. மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

18 முதல் 60 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியினையும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக செலுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

மேலும், இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 186 கோடி தடுப்பூசிகளும், தமிழகத்தில் மட்டும் 10.39 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு இந்தத் திட்டம் வெற்றியடைந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தத் தடுப்பூசித் திட்டம் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுதான்.

எனவே, முதல்வர் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செலுத்துவதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும், இல்லையெனில் மாநில அரசின் நிதியிலிருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.