எந்தக் கட்சியும் பெரும்பான்மை இல்லை: ஜொமனியில் கூட்டணி கட்சி ஆட்சி அமைகிறது

germany election
By Irumporai Sep 27, 2021 11:49 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியான ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.

அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்தார். இதற்கிடையே, அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் ஏஞ்சல் மெர்கல் போட்டியிடவில்லை.

அவருக்கு பதில் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் சார்பில் ஆர்மின் லஷெட் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய இடதுசாரி கட்சியான ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஒலாப் ஷோல்ட்ஸ் போட்டியிட்டார்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு நேற்று காலை முடிவுகள் வெளியாக தொடங்கின. இதில் ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி நாட்டில் 16 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியை சிறிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி 29.5 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24.1 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் இரு பிரதான கட்சிகளும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்று வருகின்றன. கிரீன்ஸ் கட்சியானது சோஷலிஸ்ட் டெமாக்ராடிக் கட்சியையும், ஃப்ரீ டெமாக்ராடிக் கட்சியானது யூனியன் பிளாக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் எனத் தெரிகிறது. கடந்த முறையும் ஜொமனியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.