கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு மோசடியா? - வசமாக சிக்கிய 60 வயது முதியவர்
ஜெர்மனியில் 60 வயது முதியவர் ஒருவர் போலி சான்றிதழ் தயாரித்து விற்பதற்காக சுமார் 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களுடன் 2 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் சமூகத்தில் பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு தொற்றாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு தடுப்பூசி ஒன்றே தற்காலிக தீர்வு என்பதால் அனைத்து மக்களுக்கு இதனை செலுத்த அந்தந்த நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கிய மக்களை பரிசுப்பொருட்கள், விழிப்புணர்வுகள் ஏற்படுத்த அரசுகள் தள்ளப்பட்டன. இப்படி நிறைய மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கும் நாடாக ஜெர்மனி உள்ளது. இதனை பயன்படுத்தி தனது வருமானத்திற்கான முதலீடாக 60 வயது முதியவர் ஒருவர் மோசடி ஒன்றை செய்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறி பல நாடுகள் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போலி சான்றிதழ் பெற ஆர்வம் காட்டியுள்ளனர்.
இதற்காக 60 வயது முதியவர் ஒருவர் சுமார் 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த சான்றிதழை விற்றுள்ளார். மேலும் போலியாக தடுப்பூசிச் சான்றிதழ் தயாரித்துத் தரும் பணியையும் செய்து வந்திருப்பது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் எலியன்பெர்க் என்ற ஊரில் நடந்த தடுப்பூசி முகாமில் தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோது வசமாகச் சிக்கியுள்ளார்.
தொடர்ந்து இத்தனை முறை அதுவும் வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டதால், அந்நபரின் உடல்நிலையையும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் ஜெர்மனியில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.