உக்ரைன் போரை ஈராக் போர் என மாற்றி சொன்ன முன்னாள் அமெரிக்க அதிபர் - பொதுமக்கள் அதிர்ச்சி
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை ஈராக் போர் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மாற்றி சொன்ன விவகாரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக 2 முறை பதவி வகித்தவர் ஜார்ஜ் புஷ். அவரது ஆட்சி காலத்தில் மேற்கு ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்த கூடிய ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 2003 ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில், 2.5 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள ஜார்ஜ் டபிள்யூ புஷ் மையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது உக்ரைனில் போர் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் புதினை குறிப்பிடும் நோக்கில் பேசிய அவர், தனி மனிதர் ஒருவர் அதிகாரம் பெற்று முழுவதும் நியாயமற்ற மற்றும் கொடூர படையெடுப்பு ஈராக் மீது நிகழ்த்தப்படுகிறது என கூறிப்பிட்டார்.
அப்போது பார்வையாளர்கள் அமைதி காத்ததை கவனித்த ஜார்ஜ் புஷ் தனது தவறை திருத்தி கொண்டு நான் உக்ரைனை கூறினேன் எனக் கூறி சமாளித்தார். வயது முதிர்வால் தனது பேச்சு தவறாகி விட்டது என அவர் கூறியதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.