ஜடேரி நாமக்கட்டி,செடிபுட்டா சேலை, மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!
ஜடேரி நாமக்கட்டி,செடிபுட்டா சேலை, மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு
இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் 1999 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு அது 2002 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
உணவுப் பொருட்கள் வேளாண் பொருட்கள் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் புவிசார் குறியீடு பெறுவதற்கு தகுதியுடையவை.
அந்தவகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 45 பொருட்கள் முதல் கட்டமாக புவிசார் குறியீடு பெற்றன.
அதனைத் தொடர்ந்து மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நெகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட மேலும் 11 பொருட்கள் புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றன.
மேலும் மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு
இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய மூன்று பொருட்களுக்கும் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதன் மூலம் நாட்டிலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.