”எத்தனை தலைமுறைகளுக்கு நாம் இதை தொடர வேண்டும்.?“ உச்சநீதிமன்றம் சர்ச்சைக் கருத்து
மகாராஷ்டிராவில் மராத்தா பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது “இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு நாம் இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்தும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது மராத்தா பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இதனைத் எதிர்த்து பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மராத்தா இடஒதுக்கீட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் மராத்தா இடஒதுக்கீட்டை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அந்த வழக்கை தற்போது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்து வருகிறது. அதில் தான் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நாம் இடஒதுக்கீட்டை தொடர்ப்போகிறோம் எனக் கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் விதித்திருந்த 50 % என்கிற உச்சவரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.