கோவையில் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
கோவை மாவட்டம் துடியலூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் மாநகராட்சி நிர்வாகம் கடுமையாக இரண்டாம் கட்ட தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிகளை, பொதுமக்கள் போட்டுக் கொள்ள தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என கோவை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து, கோவை துடியலூர் பகுதியில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தொற்று தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து, தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் இரண்டாம் கட்டமாக அதிகளவில் பரவி வருகின்ற கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், பொதுமக்களும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.