இந்திய ராணுவத்தின் புதிய தளபதி இவர் தான் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

indianarmy generalmanojpande manojpande
By Petchi Avudaiappan Apr 18, 2022 05:40 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய நாட்டின் 28ஆவது ராணுவ தளபதியாக உள்ள ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் 28 மாத பதவிக்காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடைகிறது.  இதனால் அடுத்து ராணுவ தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்று கேள்வி எழுந்தது. 

இதனிடையே இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்  ஏப்ரல் 30ஆம் தேதி முதல் அதாவது ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். நாட்டின் 29ஆவது ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பு ஏற்கவுள்ளார். இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 

நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரான பாண்டே 1982 ஆம் ஆண்டு டிசம்பரில் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியராக நியமிக்கப்பட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பல்லன்வாலா செக்டரில் ஆப்ரேஷன் பராக்ரம் நடத்தப்பட்ட போது பொறியாளர் படைப்பிரிவுக்கு லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தலைமை தாங்கினார்.

கடந்த 2001 நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட நடவடிக்கை பராக்ரமில் நாட்டின் மேற்கு எல்லையில் பெரிய அளவிலான படைகள் மற்றும் ஆயுதங்களை இந்திய ராணுவம் அணிதிரட்டியது. இவர் தனது 39 ஆண்டுக்கால ராணுவ வாழ்க்கையில் பொறியாளர் படைப்பிரிவு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள காலாட்படைப் படைப்பிரிவு, லடாக் செக்டாரில் ஒரு மலைப் பிரிவு, வடகிழக்கில் ஒரு படைப்பிரிவுக்கும் தலைமை தாங்கி உள்ளார்.

தற்போது ராணுவத்தில் கிழக்கு பிரிவுக்கு பாண்டே தலைவராக உள்ள நிலையில் இதற்கு முன் அவர் அந்தமான் நிக்கோபார் படைப் பிரிவில் தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.