பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் விலகல்
தமிழக பாஜகவின் கட்சியின் முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் அண்மையில் கட்சி தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அவரை கட்சியிலிருந்து 6 மாதங்கள் நீக்கி மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.
மேலும் அவரின் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள கட்சியில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் இன்றைய தினம் பாஜகவிலிருந்து விலகுவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அவர் முன் வைத்துள்ளார்.
அண்ணாமலை தலைமையிலான பாஜக கட்சியில் பெண்களுக்கு சம மரியாதை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை அவர் நேரடியாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அவர் அண்ணாமலை மீது மறைமுகமாக பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார். அதை தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து 6 மாத காலம் நீக்கப்பட்டார் இப்படிபட்ட ஒரு நிலையில், இனி இந்த கட்சியில் இருக்க போவதில்லை.
ஏனென்றால் விசாரணை முறையாக நடக்கவில்லை என்று அவர் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். இந்த நிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டு
பாஜகவை பொறுத்தமட்டில் கட்சியில் உண்மையான தொண்டர்களுக்கு எந்த மதிப்பும் அண்ணாமலையால் வழங்கப்படுவதில்லை, கட்சியில் வேலை செய்பவர்கள் விரட்டுவது மட்டும் தான் அவரது தலைமையின் குறிக்கோளாக இருப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல் தொடர்பான ஆடியோக்கள் மற்றும் வீடியோக்கள் தன்னிடம் அதிகமாக இருப்பதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்.
அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தான் இன்னும் என்னுடைய குரு என தெரிவித்துள்ளார்.