கௌதம சிகாமணி வழக்கு...பொன்முடி மகன் வழக்கில் அதிரடியாக உத்தரவிட்ட முதன்மை நீதிமன்றம்
அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதமசிகாமணி மீதான வழக்கில் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமலாக்கத்துறை பொன்முடி விவகாரம்
தற்போதைய தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி , கடந்த திமுக ஆட்சியில் கனிமவள அமைச்சராக இருந்த போது, செம்மமண் குவாரி டெண்டர்களை தனது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கியதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
கடந்த 2012-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து அண்மையில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கவில்லை என கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை துவங்கியது.
நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு
பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத இந்திய பணங்களும், வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியதாக கூறப்படும் நிலையில், இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடியை அழைத்து சென்று இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர்.
இதில் சென்ற மாதம் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதமசிகாமணி மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை தற்போது எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான விசாரணையை நடத்தும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.