“நல்ல பேரை மட்டும் வச்சிட்டு இருந்தா ஆட முடியாது..பயந்துட்டுலாம் இருக்கவும் வேணாம்” - கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு அட்வைஸ்
புகழையும் நற்பெயரையும் வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாது என இந்திய அணியின் முன்னாள் ஓபனர் கௌதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வி அடையும்.
ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது இதற்கிடையேதான் கௌதம் காம்பிர் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்தில்,
‘நற்பெயரைக் கொண்டு யாரும் ஆட்டத்தை ஆட முடியாது. கிரிக்கெட் வெறுமனே நற்பெயரைக் கொண்டு ஆடப்படும் ஆட்டமல்ல.
இந்திய அணியின் முதல் 4 அல்லது ஐந்து ஆட்டக்காரர்கள் எப்போதுமே பலம் வாய்ந்தவர்கள் அனுபவமிக்கவர்கள் என்கிற பெயர் உண்டு. ஆனால் கிரிக்கெட் மிடில் லெவல் ஆட்டக்காரர்களால் ஆடப்படுவது.
அதுதான் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முடிவு செய்யும்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் ’நாம் தோற்றுவிடுவோமோ நமது விளையாட்டு நல்லபடி இருக்காதோ என்கிற அச்சத்தையெல்லாம் களைந்துவிட்டு விளையாடும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிய சிறிய முயற்சிகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அது இல்லையென்றால் நாம் வெறும் எண்ணிக்கையை நோக்கிதான் நகர்ந்துகொண்டிருப்போம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.