"அவருக்கு பதிலா ரஹானே, புஜாராவை ஏன் நீக்கக்கூடாது" - முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கேள்வி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் விராட் கோலி இந்திய அணிக்குள் வந்தவுடன் அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரியை நீக்குவது நியாயமற்ற செயல்.
அவருக்கு பதிலாக ரஹானே, புஜாராவை ஏன் நீக்கக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி முதுகு வலி காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார்.
3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடும் பட்சத்தில் ஹனுமா விஹாரி மீதுதான் வெட்டு விழும், அவர் நீக்கப்படுவார்.
இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது,
''விராட் கோலி 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடும். ஒருவேளை அவர் அணியில் இடம் பெற்றால், அவருக்கு பதிலாக இளம் வீரர் ஹனுமா விஹாரியை ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கினால் அது நியாயமற்ற செயல்.
விஹாரிக்குத் தன்னை நிரூபிக்கப் போதுமான வாய்ப்புகளை டெஸ்ட் போட்டியில் வழங்கவில்லை. கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டியில் விஹாரி இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் அடுத்த போட்டியில் விஹாரியைத் தேர்வு செய்யாமல் அமரவைத்தால் அது வேதனைக்குரியது.
ரஹானே கடந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்தார் என்பதை நியாயப்படுத்தினால், விஹாரி 40 ரன்களுடன் நாட் அவுட்டாகி இருந்தார்.
ரஹானே இடத்தில் விஹாரி களமிறங்கியிருந்தால், நிச்சயம் விஹாரி அரை சதம் அடித்திருப்பார். இரு இன்னிங்ஸிலும் விஹாரி மிகுந்த கட்டுப்பாட்டுடன்தான் பேட் செய்தார். ஹனுமா விஹாரி போன்ற வீரர்களுக்கு நீண்ட வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கிவிட்டு, ஓராண்டுவரை அமரவைப்பது நியாயமற்றது. அதற்கு பதிலாக, ரஹானே பேட் செய்த விதத்தை ஓராண்டாகப் பார்த்து வருகிறோம். அவரை அமரவைக்கலாம், புஜாராவை நீக்கலாம்.
விராட் கோலி களமிறங்கும்போது 4-வது இடத்திலும் விஹாரி 5-வது இடத்திலும் களமிறங்கலாம். இதுதான் சரியான முடிவாக இருக்கும் என நினைக்கிறேன்.
இரு இன்னிங்ஸிலும் விஹாரி நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தியதால், கேப்டவுனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம்.
ரஹானேவுக்கு ஏராளமான வாய்ப்புகளை அணி நிர்வாகம் வழங்கியிருந்தால், விஹாரி மீதும் நம்பிக்கை வைக்கவேண்டிய நேரம் இதுதான்.
விஹாரி இரு இன்னிங்ஸிலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதால் தெரிவிக்கிறேன்''என தெரிவித்தார்.

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
