ஓய்வை அறிவித்த அதானி - அதானி சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க போவது யார்?
அதானி குழும நிறுவனர் கெளதம் அதானி ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
அதானி குழுமம்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தில் ஒன்று அதானி குழுமம். சமையல் எண்ணெய் உற்பத்தி தொடங்கி சோலார் மின்சாரம் உற்பத்தி, எரிவாயு உற்பத்தி, உணவு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, கிரிக்கெட் அணி, ஊடகங்கள், துறைமுகம், விமான நிலையங்கள் நிர்வாகம் என பல துறைகளில் அதானி குழுமம் கால் பதித்துள்ளது.
பல லட்சம் கோடி மதிப்புள்ள அதானி குழுமத்தின் நிறுவனரான கவுதம் அதானி தனது 70 வயதில் ஓய்வு பெற உள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கெளதம் அதானி இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்ததாக 2 வது இடத்தில உள்ளார்.
ஓய்வு
ஓய்வுக்கு பின் அதானி குழுமத்தை தன் வாரிசுகள் நிர்வகிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதானி தன் 2 மகன்களையும், தன் சகோதர்கள் மகன் இருவரையும் வாரிசாக கூறி வருகிறார். தொழில் வளர்ச்சி நீடித்து நிலைத்து நிற்க அதன் மீதான அதிகாரத்தை வாரிசுகளிடம் ஒப்படைப்பது மிகமிக முக்கியம் என கூறியுள்ள அதானி, தலைமைப் பொறுப்பு மாற்றம் இயல்பாக, படிப்படியாக, முறைப்படி நடக்க வேண்டும் என்பதால் அந்தப் பொறுப்பை 2-வது தலைமுறையினரிடமே நம்பிக்கையுடன் விட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் இணைந்தே தொழிலை நடத்தலாம். இல்லாவிட்டால் விருப்பத்திற்கு ஏற்ப பிரிவினை செய்து கொள்ளலாம் என்ற உரிமையை அளித்திருந்தாலும் மகன்களும், மருமகன்களும் இணைந்தே அதானி குழுமத்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளனர். பொதுவாக 2 ஆம் தலைமுறை தொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் என் வாரிசுகள் ஒன்றிணைந்து அதானி பாரம்பரியத்தை வலுவாக கட்டமைக்கத் தயாராக உள்ளனர் என கூறியுள்ளார்.
வாரிசுகள்
கௌதம் அதானியின் மூத்த மகன் கரண் அதானி தற்போது அதானி துறைமுகங்களின் நிர்வாக இயக்குனராகவும், இளைய மகன் ஜீத் அதானி, அதானி விமான நிலையங்களின் இயக்குனராகவும் உள்ளனர்.
பிரணவ் அதானி, அதானி என்டர்பிரைசஸின் இயக்குனராகவும், சாகர் அதானி தற்போது அதானி கிரீன் எனர்ஜியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளனர். கௌதம் அதானியின் இரு சகோதரர்களான வினோத் அதானி, ராஜேஷ் அதானியின் மகன்கள் தான் பிரணவ் அதானி, சாகர் அதானி ஆகும்.