ரூபாய் ஆயிரத்தை நெருங்கும் சமையல் சிலிண்டரின் விலை - தவிக்கும் பொதுமக்கள்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.36.50 அதிகரித்தது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் நேற்று திடீரென 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் ரூ.900.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.915.50 ஆக உயர்ந்துள்ளது. கிட்டதட்ட ரூபாய் ஆயிரத்தை நெருங்குவதால் இந்த விலை உயர்வு பொதுமக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இதனால், அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.