நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் பூண்டு குழம்பு! சுவையாக செய்வது எப்படி?
பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
சுவையான பூண்டு குழம்பு செய்ய -
தேவையான பொருட்கள் :
பூண்டு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 4 (பெரியது)
வெந்தய பொடி - 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
புளி - 2 எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 100 கிராம்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி விட வேண்டும்.
சுவையான பூண்டு குழம்பு ரெடி.