பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை

chennaicorporation
By Petchi Avudaiappan Sep 21, 2021 07:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் தூய்மை பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்பட்டு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும், இதில்  குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் மறு சுழற்சி மையங்களில் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறு சுழற்சி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சியாளர்களிடம் வழங்கப்படுவதோடு, மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.மேலும் மாநகராட்சியின் சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே  மாநகராட்சியின் ஒருசில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதாக மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது.எனவே சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களின் மீது ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

சாக்கடை மற்றும் திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டும் நபர்களின் மீது ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.