பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் – பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Fine Chennai Corporation garbage in public
By Thahir Sep 22, 2021 04:44 AM GMT
Report

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் – பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை | Garbage In Public Places Fine Chennai Corporation

தூய்மை பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. இந்த திடக்கழிவுகளில் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் மறு சுழற்சி மையங்களில் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறு சுழற்சி செய்யப்படுகிறது.

மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் மாநகராட்சியின் ஒருசில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதாக மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது.

மேலும், கோவிட் தொற்றின் ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த நிறுவனங்கள் அரசின் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு திறக்கப்படும் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற திடக்கழிவுகள் அருகில் உள்ள பொதுஇடங்களில் கொட்டப்படுவதாக மாநகராட்சிக்கு புகாராக பெறப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களின் மீது ரூ.500 அபராதமும், சாக்கடை மற்றும் திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டும் நபர்களின் மீது ரூ.100 அபராதமும் விதிக்கப்படும்.

அதனால் பொதுமக்கள் மாநகராட்சியில் பொதுஇடங்களிலும் நீர்வழித்தடங்களிலும் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.