அரசு மருத்துவமனையில் ஏன் மருத்துவர் இல்லை? நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம்
அரசு மருத்துவமனையில் ஏன் மருத்துவர் இல்லை என நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கஞ்சா கருப்பு
நடிகர் கஞ்சா கருப்பு கால் வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள மாநகராட்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், அங்குள்ள ஊழியர்களிடம் இது பற்றி கேட்டுள்ளார். அப்போது மருத்துவர்கள் 3 மணிக்கு வருவார்கள் என தெரிவித்ததாக கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
மருத்துவர் இல்லை
மேலும், அங்கு ஏற்கனவே நாய்கடியால் பாதிக்கப்பட்ட ஒருவரும், உடல்நிலை சரியில்லாத மூதாட்டி ஒருவரும் காலையிலிருந்தே காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மூதாட்டி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
24 மணி நேரமும் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இருக்க வேண்டிய நிலையில் ஏன் மருத்துவர் இல்லை, காலை 7 மணியில் இருந்து காத்திருக்கிறோம் 11 மணியாகியும் மருத்துவர் வரவில்லை என அங்கிருந்தவர்கள் கஞ்சா கருப்புடன் சேர்ந்து மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தைப்பூசத்திற்காக மருத்துவர்கள் விடுப்பில் சென்றதால் மாற்று மருத்துவர் வர தாமதம் ஆகி இருக்கும். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை துணை மேயர் மகேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.