விராட் கோலி விஷயத்தில் மீண்டும் மாட்டிக்கொண்ட கங்குலி - கொந்தளிக்கும் ரசிகர்கள்
விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதிலுள்ள உண்மை தகவலை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் இதுகுறித்து பேசியிருந்த விராட் கோலி பிசிசிஐ தலைவர் கங்குலி மீது மறைமுக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியபோதே, வேண்டாம் என பிசிசிஐ அதிகாரிகள் கோரியதாகவும், அதனை அவர் கேட்கவில்லை என்றும் கங்குலி கூறியிருந்தார். ஆனால் அப்படி யாருமே தன்னிடம் கோரவில்லை, ஒருநாள் அணியின் கேப்டன்சியில் கூட கடைசி நேரத்தில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விராட் கோலி பகிரங்கமாக தெரிவித்தார்.
இதனால் யார் கூறுவது பொய்? என ரசிகர்கள் குழம்பி போயினர். இதனிடையே இதற்கு மீண்டும் விளக்கமளிக்க சென்று கங்குலி சர்ச்சையில் சிக்கியுள்ளார். முதலில் கோலியின் கருத்து குறித்து பேசிய கங்குலி, அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. கூறினாலும் அது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்து கொள்ளும், பிசிசிஐ தக்க நேரத்தில் பதில் சொல்லும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதற்கு முழு தகுதியுடையவர். அவர் இதற்கு முன் செய்த சாதனைகள் அப்படி. 5 முறை மும்பை அணிக்காக கோப்பைகள், அழுத்தங்களை கையாளும் தகுதிகள் என சிறந்த கேப்டன் அவர். அதற்கேற்றார் போலவே நியூசிலாந்து தொடரை 3 - 0 என முடித்துக்கொடுத்தார். இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய சாதனைகளை காணலாம்.
2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் சொதப்பியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா விளையாடிய மிக மோசமான ஆட்டம் இதுவே ஆகும். வீரர்கள் சுதந்திரமாக விளையாடாததே இதற்கு காரணம். 15 சதவீத நம்பிக்கையுடன் மட்டும் தான் விளையாடினார்கள் என நினைக்கிறேன் எனக் கங்குலி கூறியுள்ளார்.
விராட் கோலியின் ரசிகர்கள் ஏற்கனவே கங்குலி மீது கோபத்தில் உள்ள நிலையில் அவர் ரோகித் சர்மா குறித்து புகழ்ந்து பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.