தாதா உருவெடுத்த வரலாறு - ’god father of cricket’ கங்குலி பிறந்த தினம் இன்று!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இவர் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகிவிட்டது. இந்திய கிரிக்கெட்டும் அதன்பிறகு வெகுதூரம் பயணித்துவிட்டது. ஆனாலும் தாதா எனும் பெயர் அதே வீரியத்துடன் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறதே! எப்படி?
இன்றைய நாயகர்கள் தோனி, கோலி ஆகியோருக்கு இணையாக ஃபேஸ்புக் பக்கங்களிலும் சரி, தவான் ஆஃப் சைடில் பவுண்டரி அடித்தாலும் சரி, கோலி ஆக்ரோஷமாய் எதிரணியை அலறவிட்டாலும் சரி, இவ்வளவு ஏன்…ஸ்மிரிதி மந்தனா ஆன் சைடு சிக்சர் அடித்தாலும் சரி... இந்த ஒவ்வொரு செயலலிலும் கங்குலியை ஒப்பிடுகிறார்களே…ஏன்?
இன்னும் அவரை மறக்கவில்லையா? உலகக்கோப்பையை வென்று தராத ஒருவரை இன்னும் ஏன் இந்த தேசம் தலைசிறந்த கேப்டன் என தலையில் வைத்துக் கொண்டாடுகிறது? காரணம் இருக்கிறது.
இன்றைய ட்ரெண்டில் சொல்ல வேண்டுமானால் கிரிக்கெட் இஸ் எ கேம்…தாதா இஸ் ஆன் எமோஷன்!
தாதா என்றால் அண்ணனைக் குறிக்கும் பெங்காலி வார்த்தை. ஆனால், நம்ம ஊர் தாதா போன்று கங்குலி உருவகப்படுத்தப்பட்டார். காரணம் அவரது மாஸ். அவரது கெத்து அவரது ரசிகர்களை வெறியர்களாக்கியது. எப்படி வேலு நாயக்கரிலிருந்து டேவிட் பில்லா வரை ஒவ்வொரு தாதாவிற்கும் ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கிறதோ, அதேபோல இந்த தாதாவுக்கும் ஒரு ஃபிளாஷ்பேக் உண்டு.
கங்குலி எனும் கிரிக்கெட் வீரன், இந்திய கிரிக்கெட்டின் காட்ஃபாதராய் மாறியது எப்படி? சினிமாவில் ஒரு தாதா உருவாவது இப்படித்தான்
1.ஒரு பெரிய ஆள் எல்லோரையும் அடக்கி ஆண்டு கொண்டிருப்பான்.
2.நம்ம ஹீரோ மோசமான பின்புலத்திலிருந்து வந்திருப்பான்.
3.ஒருநாள் பொங்கி எழும் ஹீரோ அந்த பெரிய ஆளை ஜீரோவாக்குவான். ‛இனிமே எல்லாம் அப்படித்தான்’ என மக்கள் துணை நிற்பார்கள்.
4. அப்பறம் பெரிய பெரிய விஷயங்களை வரிசையாகச் செய்ய, அவர் அந்த ஏரியாவில் தாதாவாக உருவெடுப்பார்.
அதே டெம்ப்ளேட் தான் இங்கேயும்…
1. கிரிக்கெட் எனும் குளோபல் விளையாட்டை ஒற்றை ஆளாய் ஆண்டு கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அசைக்க முடியாமல் வலம் வருகிறது.
2. சூதாட்டம் என்னும் அசுரனின் பிடியில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியை கரைசேர்க்க ஆபத்வாந்தனாய் கேப்டனாகிறார் கங்குலி.
3. யாராலும் அசைக்க முடியாத ஆஸி அணிக்கு 2001ல் தொடர்ந்து இரு தோல்விகள் தந்து, அத்தொடரையும் வென்று கர்ஜனையோடு உலக அரங்கிற்கு இந்தியாவின் வருகையை அறிவிக்கிறார்.
4. அடுத்தடுத்து சாம்பியன்ஸ் டிராபி, நாட்வெஸ்ட் கோப்பை என வெற்றிகளை வசமாக்கி, தாதாவாய் இந்திய ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறார் கங்குலி!
அந்தப் பயம் இருக்கணும்..!
இவை வெறும் பெருமைக்காக சொல்லப்பட்டவை அல்ல. அந்த ஒவ்வொரு பாயின்ட்டுக்குப் பின்னாலும் கங்குலி என்னும் ஆளுமையின் திறமை இருக்கிறது. இந்திய அணி உலக அரங்கில் நிமிர்ந்து நின்ற கம்பீரம் இருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக அக்டோபர் 2000ல் பதவியேற்கிறார் கங்குலி. அது இந்திய கிரிக்கெட்டின் மிகமோசமான காலகட்டம்.
சூதாட்ட சுழலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த நேரத்தில் துணிந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கங்குலி. சறுக்கி விழுந்த அணி எழுந்து நிற்குமா என்று அனைவரும் நினைக்க, அவ்வணியைப் புலிப்பாய்ச்சலில் செலுத்தினார் தாதா.
அணிக்குள் அடுத்து பிரச்னைகள் எழாமல் தடுத்தார். ஏற்கனவே ஏற்பட்ட பிரச்னைகளால் அணியின் கெமிஸ்ட்ரி குறையாமலும் பார்த்துக்கொண்டார். கங்குலி எனும் மனிதன் இருந்ததுவே சூதாட்டம் மீண்டும் இங்கு தலைதூக்காததற்கு முக்கிய காரணம்.
நோ ஈகோ…நோ பார்ஷியாலிடி..
அன்று கேப்டனாய் தாதா சோபிக்கக் காரணம், ஈகோவோ பார்ஷியாலிடியோ கொஞ்சமும் இல்லாமல் அணியை வழிநடத்தியதுதான். அதற்கு முன்பு அவ்விரு நோய்களும் இந்திய கிரிக்கெட்டோடு பயணித்துக்கொண்டே இருந்தது.
சொல்லப்போனால், முன்னாள் கேப்டன் அசாருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் ஏற்பட்ட மோதலே கங்குலிக்கான முதல் டெஸ்ட் வாய்ப்பைத் தந்தது. அப்படியான மோதல்கள் இல்லாமல் அணியை அழகாய் வழிநடத்தினார் கங்குலி. அவரது ஆட்டிட்யூட் பலமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஆனால் என்றுமே தன் வீரர்களுக்கான மரியாதையை அவர் செலுத்தத்தவறியதில்லை. இதற்கு 2011ல் நடந்த ஒரு சம்பவமே பெரிய எடுத்துக்காட்டு. தாதா – எங்கும் எதிலும்.. ஒரு கேப்டனாக மட்டுமல்லாது ஒரு பேட்ஸ்மேனாகவும் தாதா தனக்கென்று மாபெரும் ரசிகர் படை வைத்திருந்தார்.
நாமெல்லாம் கிரிக்கெட் பேட் பிடிச்சது சச்சினைப் பாத்துனா, அத லெஃப்ட் ஹேண்டேடா புடிச்சது கங்குலியைப் பார்த்துதான். அவரது ஸ்டைல் அவருக்கே உரியது. அவரது ஆஃப் சைடு ஷாட்கள் பற்றியும், அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்சர்கள் பற்றியும் நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த மே மாதம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் வலைதளத்தில் அறிவிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியின் ‘ஆல் டைம் பெஸ்ட் லெவனு’க்கு தாதா தான் கேப்டன். தன் 22 ஒருநாள் சதங்களில் 18 சதங்களை அந்நிய மண்ணில் அடித்த அசாத்திய பேட்ஸ்மேன். வெளிநாட்டு மண்ணில் இந்தியா வெற்றி பெற தானே முன்னுதாரணமாக விளங்கியவர்.
கிரிக்கெட் என்ற பெயர் ஓடும் வரை அதற்கு காட் பாதராக விளங்குவார் கங்குலி..!