வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாக பண மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

customercarecheating
By Petchi Avudaiappan Oct 27, 2021 11:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

மொபைல் எண் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவது போல் பேசி வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்த ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவைச் சேர்ந்த வாலிபர்கள் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,  சென்னை பெருநகர மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் கடந்த 26.09.2021ம் தேதி அவருடைய தொலைபேசி எண்ணிற்கு மொபைல் கம்பெனியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து வருவது போல் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் என்னுடைய செல்போன் சிம்கார்டுக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் உள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் சமர்பிக்காவிட்டால் செல்போன் சேவை நிறுத்தப்படும் என்றும், அதை தவிரப்பதற்காக வாடிக்கையாளர் சேவை மைய எண் என்று கூறி ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை உண்மை என்று நம்பி நானும் கொடுக்கப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். எதிர்முனையில் பேசிய நபர் உடனடியாக 5 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக http://www.rechargecube.com என்ற இணையதளத்திலிருந்து "Fast Support" என்ற ஆப்பை அதனை டவுன்லோடு செய்து மேற்படி உண்மை என்று நம்பிய பணம் செலுத்துமாறு என்னிடம் கூறினார்.குறிப்பிட்ட ஆப்பை நானும் மொபைலில் டவுன்லோடு செய்து அதில் என் வங்கி கணக்கு விபரங்களை சமர்பித்து பணம் செலுத்துவதற்கு முயற்சி செய்தேன். அப்போது அந்த நபர் பணம் வரவில்லை என்றும் வேறு ஒரு செல்போனில் இருந்து வேறு ஒரு வங்கி கணக்கு மூலமாக பணம் செலுத்துமாறு கூறி தவறினால் செல்போன் சேவை துண்டிக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரித்தார்.

அதனையும் நம்பி எனது மனைவியின் செல்போனில் மேற்படி இணையதளத்திலிருந்து குறிப்பிட்ட அந்த ஆப்பை டவுன்லோடு செய்து என் மனைவியின் வங்கி கணக்கு விபரங்களை சமர்பித்து பணம் செலுத்துவதற்கு முயற்சி செய்தேன். அந்த பணமும் வரவில்லை என்றும் வேறு ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்துமாறு கூறினார். அதனையும் நம்பி மனைவியின் மற்றொரு வங்கி கணக்கிலிருந்து வங்கி கணக்கு விபரங்களை சமர்பித்து பணம் செலுத்துவதற்கு முயற்சி செய்தேன். அப்போது அந்த நபர் அந்த பணமும் வரவில்லை என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.90,134/- எடுக்கப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதேபோல் என்னுடைய மனைவியின் ஒரு வங்கி கணக்கிலிருந்து ரூ.8,60,850/- மற்றொரு வங்கி கணக்கிலிருந்து ரூ.3,59,000/-ம் எடுக்கப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மேற்படி மொபைல் கம்பெனி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாக சொன்ன செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அதனை அவர்கள் எடுக்கவில்லை. அப்போதுதான் மேற்படி மோசடி நபர்கள் திட்டமிட்டு ரூ.13,09,984/-ஐ தங்களது வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்ததும், மேற்படி இணையதளம் மற்றும் ஆப்மூலமாக தங்களது வங்கி கணக்கு விபரங்களை பெற்று ஏமாற்றி பணம் எடுத்துவிட்டதும் தெரிந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் பிரிவில் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக தனிப்படை போலீசார் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு விரைந்து சென்று கொல்கத்தா ஹவுரா நகரில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்ட ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிஷ்வநாத மண்டல், பாபி மண்டல் ஆகியோரை 25.10.2021ம தேதி கைது செய்து விசாரணை செய்தது. அவர்களிடமிருந்து மோசடி செயல்களுக்கு பயன்படுத்திய 20 மொபைல் போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கி கணக்கு அட்டைகள், ஸ்வைப்பிங் மிஷின்கள் 4 ஆகியவற்றை போலீஸ் கைப்பற்றியது. மோசடி மூலம் சேர்த்த பணம் ரூ.11,20,000/-, தங்க ஆபரணங்கள் 148 கிராம் மற்றும் ஹோன்டா சிட்டி கார், ஆகியவற்றையும் போலீஸ் டீம் கைப்பற்றியது. பின்பு குற்றவாளிகளை ஹவுரா தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  

இந்நிலையில்எனவே மொபைல் போன் மற்றும் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை அப்படியே உண்மை என்று நம்பி வங்கிகளிலோ, மொபைல் சேவை நிறுவனங்களிலோ விசாரிக்காமல் உடனடியாக ஏதோ ஒரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்கள் சொல்வதைப் போல ஏதோ ஒரு இணையதளத்திலிருந்து ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம். மேற்படி ஆப்களில் தங்களது வங்கி கணக்கு விபரங்களான இணையதள வங்கி சேவை யூசர் நேம், பாஸ்வேர்டு, பின் நம்பர், ஒடிபி எண். வங்கி கணக்கு விபரங்கள், கடன் அட்டை எண். சிவிவி எண், போன்ற எந்த தகவல்களையும் வழங்கக்கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.