நெல்லையில் கொடூரம்; கணவனை இழந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது
மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து சங்கரன் கோவில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது குழந்தைகளை காப்பாற்ற அந்த பெண் நெல்லையில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது வண்ணார்பேட்டை சாலை தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கூட்டு பாலியல் பலாத்காரம்
சம்வத்தன்று காலை அந்த பெண்ணை நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு முருகன் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஆட்டோ டிரைவர் முருகனின் நண்பர்களான மணிகண்டன், பேராட்சி, அய்யாசாமி ஆகியோரை அழைத்துள்ளார்.
பின்னர் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் தங்களது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளனர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பெண்ணை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
4 பேர் கைது
இதனால் சோர்வடைந்த அந்த பெண் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் காயங்களால் வலி அதிகரிக்கவே, அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது தான் உண்மை சம்பவம் தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பாளை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் ராமேஸ்வரி விசாரணை நடத்தினார். பின்னர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.