‘இதுதான் தமிழ்நாடு’ - இஸ்லாமியர்கள் சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா
கிருஷ்ணகிரியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வீடுகளிலும், வீதிகளிலும், கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் உட்பட பல சிறப்புகள் செய்யப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் சதுர்த்தி விழா வழக்கம்போல சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுப்பேட்டை மிலாடி நபி விழா குழு சார்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அங்குள்ள டான்சி வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என்.அஸ்லம் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.
இந்த விழாவில் பாஜக மூத்த நிர்வாகி கோட்டீஸ்வரன் கலந்து கொண்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கோவிலில்அன்னதானம் வழங்குவதற்காக இஸ்லாமியர்கள் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.